அரசு டாக்டர்கள் மார்ச் 1ல் போராட்டம்

திருச்சி: பட்ட மேற்படிப்புக்கு, 50 சதவீத ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் மார்ச், 1 முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின், 10வது மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நேற்று
நடந்தது. தலைமை வகித்த, மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதை உடனடியாக அமல்படுத்தி, தமிழக அரசு டாக்டர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும்.தமிழக அரசு டாக்டர்கள் பட்ட மேற்படிப்பு படிக்க, ஏற்கனவே, 50 சதவீதம் ஒதுக்கீடு இருந்தது. 'நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், அரசு டாக்டர்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் அல்லது மருத்துவக் கவுன்சிலில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, 50 சதவீத ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச், 1 முதல், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.