மின் ஊழியர் வேலைநிறுத்தம் : 19 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னை: மின் வாரியத்தில், ஒரே நாளில், 19 ஆயிரம் ஊழியர்கள் விடுப்பு எடுத்து, வேலைநிறுத்தம் செய்ததால், மின் கட்டண வசூல் பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் அனைவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2015 டிசம்பர் முதல், புதிய ஊதியம் வழங்க வேண்டும்.
கட்டண வசூல் : இதுவரை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சில சங்கங்கள், நேற்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன.வேலைநிறுத்தம் அறிவித்த சங்கங்களைச் சேர்ந்த, 19 ஆயிரம் ஊழியர்கள், நேற்று பணிக்கு வராமல் விடுப்பு எடுத்து, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், பல மின் கட்டண மையங்களில், ஐந்து - ஆறு கவுன்டர்கள் இருந்தாலும், ஒன்றில் மட்டுமே, கட்டண வசூல் நடந்தது. இருப்பினும், மின் உற்பத்தி, மின் வினியோக பணிகள் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், மின் துறை அமைச்சர், தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு, நேற்று வந்தார். அவரிடம், போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் எண்ணிக்கை விபரத்தை, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிப்பு இல்லை : மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அனைத்து மின் கட்டண மையங்களும், வழக்கம் போல் செயல்பட்டன. இன்று மட்டும், மின் கட்டணமாக, 66.54 கோடி ரூபாய் வசூலானது. இது, தினமும் வசூலாகும் சராசரி தொகையான, 65 கோடி ரூபாயை விட அதிகம். வேலைநிறுத்தத்தால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:போராட்டத்தில், 19 ஆயிரத்து, 524 ஊழியர்கள் பங்கேற்றனர்; 1,000க்கும் மேற்பட்ட மின் கட்டண மையங்கள் செயல்படவில்லை. இதனால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இனியும், காலதாமதம் செய்யாமல், ஒரு வாரத்திற்குள் ஊதிய உயர்வை அறிவிக்கவில்லை எனில், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுக்கு தயார்! : சென்னை, எழும்பூரில், மின் துறை அமைச்சர், தங்கமணி அளித்த பேட்டி:மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களின், சி.ஐ.டி.யு., - பி.எம்.எஸ்., சங்கத்தைச் சேர்ந்தவர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அது, பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. கிட்டத்தட்ட, 95 சதவீதம் பேர் பணிக்கு வந்துள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரை, போராட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக, அவர்களை பேச்சுக்கு அழைக்காமல் இல்லை. தற்போதும், நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை. அவர்கள் பேச்சுக்கு வந்தால், சுமூகமாக முடிக்க, அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.