வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கப்பட்ட பிறகு அந்நிறுவனம்  தனது முதல் காலாண்டு வருவாயைப் பதிவு செய்துள்ளது.

  2017 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.504 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் தனது சேவையைத் தொடங்கியது. தொடக்கத்தில் அதிக வாடிக்கையாளர்களை விரைவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, டிசம்பர் மாத இறுதிவரை வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் இலவசம் என்று அறிவித்தது. பின்னர் ஜியோவுக்கு மக்களிடையே இருந்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு 2017 மார்ச் மாத இறுதி வரை தனது இலவசச் சேவைகள் தொடரும் என்று அறிவித்தது. இதனால் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டியது.

மீண்டும் சிறு மாற்றங்களுடன் தனது சலுகைகளை நீட்டித்த ஜியோ, ஜூலை 1ஆம் தேதி முதல் சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. எனினும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜியோவுக்கு வருவாய் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக ரூ.271 கோடி வருவாய் இழப்புதான் ஏற்பட்டது. இந்த நிலையில், 2017 அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை ஜியோ ஜனவரி 19ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், ரூ.504 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது. 2017 டிசம்பர் 31 நிலவரப்படி ஜியோ சேவையைப் பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 16 கோடிக்கும் மேல் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், 2017 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் வருவாய் இழப்பைச் சந்தித்ததாக அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளில் ஜியோ தனது வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.