ஆர்.டி.ஓ., முன்னிலையில் தற்காலிக டிரைவர்கள் தேர்வு

'அரசு பஸ்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, தற்காலிக டிரைவர்களை, ஆர்.டி.ஓ., முன்னிலையில் தேர்ந்தெடுக்க வேண்டும்' என, வேலுார் கலெக்டர் ராமன் உத்தரவிட்டு உள்ளார். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் பணிமனையில் நேற்று, கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

அப்போது, 'அரசு பஸ்கள், விபத்தில் சிக்குவதை தடுக்க, தற்காலிக டிரைவர்களை, ஆர்.டி.ஓ., முன்னிலையில் தேர்ந்தெடுக்க வேண்டும். 'அனுபவத்தின் அடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார். இதே நடைமுறையை பின்பற்றும்படி, அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் கொள்ளை? : வேலுார் மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகம் முன், நேற்று காலை, 10:00 மணிக்கு, தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், போராட்ட குழு தலைவர் தாண்டவமூர்த்தி பேசியதாவது: தற்காலிக ஊழியர்களால் இயக்கப்படும் அரசு பஸ்களில், உயிரை கையில் பிடித்தபடி செல்வதாக, பயணியர் கூறுகின்றனர்.
வேலுார் மாவட்டத்தில், மொத்தம், 940 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தினமும், 45 லட்சம் ரூபாய் வசூலாகும். வேலை நிறுத்தத்தால், தற்காலிக ஊழியர்களால், 80 சதவீத பஸ்களை இயக்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி பார்த்தால், 30 லட்சம் ரூபாய் வசூல் ஆகிஇருக்க வேண்டும்.

லுங்கியுடன் கண்டக்டர் : ஆனால், மூன்று லட்சம் ரூபாய் வசூல் ஆனதாக, அதிகாரிகள் பொய் கணக்கு காட்டுகின்றனர். வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி, அதிகாரிகள், வசூலாகும் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். பெரம்பலுார் மாவட்டத்தில், தற்காலிக
கண்டக்டர்களுக்கு, பஸ் ஸ்டாப், பயணக் கட்டணம் போன்றவை தெரியவில்லை.
ஆத்துாரில் இருந்து பெரம்பலுார் வந்த அரசு பஸ்சை இயக்கிய தற்காலிக டிரைவர், மொபைல் போனில் பேசியபடியும், ஸ்டியரிங்கை விட்டு விட்டு, வலது கையால் கியர் போட்டும் பஸ்சை இயக்கியுள்ளார். பயணியர், எச்சரித்த பின்னரே, பேசுவதை நிறுத்தி உள்ளார்.
அகரம்சீகூரிலிருந்து அரியலுார் சென்ற அரசு பஸ், பெரம்பலுார் மாவட்டம், கருப்பட்டாங்குறிச்சி என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த ஆண்டிக்குட்டை ஏரிக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், யாருக்கும் காயமில்லை.
ஜெயங்கொண்டத்தில் இருந்து சுத்தமல்லிக்கு சென்ற அரசு பஸ்சில், தற்காலிக கண்டக்டர், ஜவுளிக்கடை பையில், கட்டணம் வசூலித்தார். பெரம்பலுாரில் இருந்து திருவாளந்துறை சென்ற அரசு பஸ்சில், தற்காலிக கண்டக்டராக இருந்தவர், லுங்கியுடன், மஞ்சள் பையில் டிக்கெட் கட்டணம் வசூலித்தார்.

தானாக ஓடிய பஸ் : நேற்று முன்தினம் இரவு, திருப்பூர்- - காங்கேயம் இடையே, அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது; தற்காலிக டிரைவர் தர்மலிங்கம், 35, ஓட்டினார். காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், பயணியரை இறக்கி விட்டு, பஸ்சை நிறுத்தி, இறங்கி சென்று விட்டார். தாழ்வான பகுதியில், 'நியூட்ரலில்' நிறுத்தப்பட்டிருந்த பஸ், தானாகவே நகரத் துவங்கியது; அங்கு நின்றிருந்த சுரேஷ் என்பவர், பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பொதுமக்களை எச்சரித்தவாறே, பஸ்சில் ஏறி நிறுத்த முயன்றார். அதற்குள், அங்கு நின்றிருந்த காரின் பக்கவாட்டில் மோதி, பஸ் நின்றது. இதில், பஸ்சின் முன்புறமும், காரின் பக்கவாட்டு பகுதியும் சேதமானது.