'தினமலர்' நடத்திய, 'நீட்' மாதிரி தேர்வு: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

சென்னை;'தினமலர்' நாளிதழ் சார்பில், சென்னையில், நேற்று நடந்த, 'நீட்' மாதிரி தேர்வில், மாணவ- - மாணவியர், ஆர்வமுடன் பங்கேற்றனர்.

'எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பிளஸ் 2 மாணவர்கள், நீட் தேர்வு குறித்த பயத்தில் உள்ளனர்.இந்த தேர்வை எளிதாக அணுகும் வகையில், 'தினமலர்' நாளிதழ், நீட் மாதிரி தேர்வை நேற்று நடத்தியது.
'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து, இத்தேர்வை நடத்தின. ஆகாஷ் பயிற்சி நிறுவனம், 'நாலெட்ஜ் பார்ட்னர்' ஆக, இணைந்து செயல்பட்டது.
மொபைலுக்கு தடை
சென்னை, வடபழனியில் உள்ள, ஜே.ஆர்.கே., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், இந்த மாதிரி தேர்வு நேற்று நடந்தது.ஏற்கனவே, ஆன்லைன் வழியாக, தங்கள் பெயரை பதிவு செய்திருந்த மாணவ - மாணவியர், நேற்று காலை, 8:30 மணிக்கு, தேர்வு மையத்திற்கு வந்தனர். 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி, 'ஹால் டிக்கெட்' பெற்ற, 514 பேர், மாதிரி தேர்வில் பங்கேற்றனர்.மாணவர்களுடன் வந்த பெற்றோருக்கு, பள்ளி வளாகத்திற்குள் அனுமதி அளிக்கப்படவில்லை. மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வரவும், மொபைல், சார்ஜர், கால்குலேட்டர் உள்ளிட்ட, மின்னணு பொருட்கள் மற்றும் பை, பர்ஸ், ஷூ உள்ளிட்டவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டது.
காலை, 10:00 மணிக்கு, ஓ.எம்.ஆர்., தாள் மற்றும் வினாத்தாள் ஆகியவை வழங்கப்பட்டன. கறுப்பு, நீல நிற பால் பாயின்ட் பேனாக்களால், மாணவர்கள், விடைகளை குறித்தனர்.மாணவர்கள், ஆர்வமுடன் பங்கேற்ற, இத்தேர்வு, நேற்று பகல், 1:00 மணிக்கு நிறைவடைந்தது. மாணவர்கள் எளிதாக தேர்வு எழுத, ஜே.ஆர்.கே., மெட்ரிக் பள்ளி நிர்வாகமும், ஊழியர்களும் தேவையான உதவிகளை வழங்கினர்.
கருத்தரங்கு
'நீட்' தேர்வுக்கான கருத்தரங்கம், பிப்., 4ல், நடைபெற உள்ளது. அதில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இலவசமாக பங்கேற்கலாம். இதற்கான அறிவிப்பு, 'தினமலர்' நாளிதழில், விரைவில் வெளியாகும்.கருத்தரங்கில், நீட் தேர்வில், மாணவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு, தேர்வை அணுகும் விதம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளை தேர்வு செய்யும் விதம் உட்பட, பல்வேறு தகவல்களை, நிபுணர்கள் நேரடியாக வழங்க உள்ளனர்.

மாதிரி தேர்வு முக்கிய பங்காற்றும்: பெற்றோர் நம்பிக்கை
அப்பா, 'தினமலர்' வாசகர். அவர் தான், நீட் மாதிரித் தேர்வு விளம்பரம் பார்த்து, என் மகள் நந்தினிக்காக பதிவு செய்தார். ஒரு வாரமாக என் மகள், இதில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார். 'தினமலர்' நாளிதழ், கல்வி சார்ந்த செயல்களில், மற்ற நாளிதழுக்கு முன்னோடியாக உள்ளது.பிரியாவண்ணாரப்பேட்டை.

நீட் மாதிரி தேர்வு அறிவிப்பு வெளியானதும், என் மகள், ஹேமலதாவிற்காக, ஆன்லைனில் பதிவு செய்து விட்டேன். 'தினமலர்' நாளிதழின் கல்வி சார்ந்த செய்திகள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளன.சரவணன்சேப்பாக்கம்.

'தினமலர்' நாளிதழில் அறிவிப்பை பார்த்ததும், பதிவு செய்து விட்டேன். இந்த மாதிரி தேர்வு, மாணவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக உள்ளது.எஸ். மணிமேகலை-அரக்கோணம்.

என் மகன் ஹரீஷ் கிருஷ்ணா, கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறான். அவனுக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்பதே ஆசை. என்றாலும், நீட் தேர்வு பற்றிய பயம் உள்ளது. இத்தேர்வு, அந்த பயத்தை போக்கி தெளிவாக்கும்.தயாபரன்கெருகம்பாக்கம்.

தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற, 'தினமலர்' நாளிதழின், மாதிரித் தேர்வு, மாணவர்களுக்கு ஊக்கம்அளிப்பதாக உள்ளது. ஏழை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினால், மிகவும் உதவியாக இருக்கும்.மோகன்அண்ணா நகர்.

என் மகள் தாட்சாயணி, ஏற்கனவே, நீட் பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். அங்கு, இது வரை மாதிரித் தேர்வு நடத்தப்படவில்லை. இங்கு நடக்கும் மாதிரித் தேர்வு அவருக்கு, புரிதலை ஏற்படுத்தும்.மீராஆதம்பாக்கம்.


தினமலர்' வழங்கிய, நீட் மாதிரி தேர்வு, தேர்வை எளிதாக அணுகவும், தேர்வுக்கு பயமின்றி தயார் செய்து கொள்ளவும், மிகவும் உதவியாக இருக்கும். இந்த தேர்வின் வாயிலாக, மாணவர்கள் தாங்கள் எந்த நிலையில் உள்ளோம் என்பதை, அறிந்துகொள்ள முடியும்.எம்.முரளிதரன்-அடையாறு.

பணக்காரர்கள் மட்டுமே டாக்டராகலாம் என்ற நிலையில் இருந்து, நன்றாக படிக்கும் மாணவர்களால் டாக்டராக முடியும் என்பதை, 'நீட்' தேர்வு நிரூபித்து வருகிறது. இந்த, மாதிரி தேர்வு மாணவர்களுக்கு பயத்தை போக்கும்.எஸ்.ரவிமடிப்பாக்கம்.

'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட, மாதிரி வினா விடைகள் உதவியால், என் மகன், ௧௦ம் வகுப்பில், 477 மதிப்பெண்களும், பிளஸ் 2 வில், 1,130 மதிப்பெண்களும் பெற்றான். அதேபோல, இந்த நீட் மாதிரித் தேர்வும், அவனின் வாழ்வில், முக்கிய பங்கு வகிக்கும் என, நம்புகிறேன்.ஈ.பார்வதிமறைமலை நகர்.

என் மகள் ரம்யா, ௧௦ம் வகுப்பு படித்த போது, 'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தேன். அப்போது, வழங்கப்பட்ட, மாதிரி வினா விடை புத்தகம் பயனுள்ளதாக இருந்தது. அந்த நம்பிக்கையில், என் மகளை அழைத்து வந்துள்ளேன்.ரமேஷ்அயப்பாக்கம்.

மாணவர்களின் எதிர்காலம் கருதி, 'தினமலர்' நாளிதழ், பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது; இது, மிகவும் வரவேற்கத்தக்கது. மாணவர்கள், தங்கள் தவறுகளை புரிந்து கொள்ள, இத்தேர்வு ஒரு வாய்ப்பாக அமையும்.-ஜி.வனிதா-அய்யப்பன்தாங்கல்.

தற்போது, 'பிளஸ் 1' படிக்கும் என் மகன், நீட் தேர்வுக்கு, இப்போதிலிருந்தே தயாராகி வருகிறான்; அவனை போன்ற மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி தேர்வு, ஒரு வழிகாட்டியாக உள்ளது.-சி.பரமசிவம்-பழைய வண்ணாரப்பேட்டை.

தெளிவு கிடைத்தது: மாணவர்கள் மகிழ்ச்சி
நீட் மாதிரி தேர்வில், இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தன. இந்த தேர்வு, நல்ல பயிற்சியாக அமைந்தது. அடுத்து செய்ய வேண்டியது குறித்த தெளிவு ஏற்பட்டுள்ளது. நிச்சயம் நீட் தேர்வில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.ஆர். லட்சுமிநரசிம்மன்வளசரவாக்கம்.

குழப்பமான மனநிலையில் தேர்வுக்கு வந்தேன். தற்போது, நீட் தேர்வு பற்றிய புரிதல் வந்துள்ளது. மதிப்பெண்களுக்காக படிப்பது, நீட் தேர்வுக்கு உதவாது என்பதையும், நிறைய சூத்திரங்கள், சமன்பாடுகளை எழுதிப் பார்க்க வேண்டும் என்றும் புரிந்து கொண்டேன்.ஆர்.ஜோயலின்அயனாவரம்.தேர்விற்கு முன் நடைபெற்ற சோதனையால்,
மாதிரி தேர்வு என்ற எண்ணம் மறந்து, உண்மையான நீட் தேர்வு எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. மாணவர்கள் நலனில், 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து அக்கறை காட்டி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.எஸ். லலிதாம்பிகைபட்டினப்பாக்கம்.

இந்தத் தேர்வால், பயம் நீங்கி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. எந்த மாதிரியான கேள்விகள் இடம்பெறும் என தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். சில பாடங்களில், அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிந்தேன். -பி.டி.கவிச்செல்வன்சூளைமேடு.

நான், ஆகாஷ் பயிற்சி மையத்தில் தான் படிக்கிறேன். அங்கு, இதுவரை மாதிரித் தேர்வு நடத்தப்படவில்லை. 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து மாதிரி தேர்வு நடத்தி உள்ளது. தேர்வுக்கு முன், கெடுபிடி அதிகமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன்.சாஹித்யாஅய்யப்பன்தாங்கல்.

மாதிரி தேர்வில், இயற்பியல் பாடத்தில் இருந்து, அதிக சமன்பாடுகள் கேட்கப்பட்டன. நான், தியரி மட்டுமே படித்து இருந்தேன். இனி, அதிலும் கவனம் செலுத்துவேன். மாதிரி தேர்வால் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் தைரியமாக உள்ளது.ஆர்.நீலாம்பிகாதிருவொற்றியூர்.

மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு, 'நீட்' கடினமாக உள்ளது. கேள்விகள் பெரும்பாலும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. இந்த மாதிரி தேர்வால், நீட் தேர்வை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என, கற்றுக் கொண்டேன்.-பி.எல்.சோமசுந்தரம்முகப்பேர்.

'தினமலர்' நாளிதழ், நீட் மாதிரி தேர்வு நடத்துவதை பற்றி கேள்விப்பட்டு, திருவாரூரில் இருந்து வந்துள்ளேன். இத்தேர்வு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுபோன்ற மாதிரி தேர்வுகளை, அனைத்து ஊர்களிலும் நடத்தினால், ஏராளமானோர் பயனடைவர். ஆர்.ரேஷ்மாதிருவாரூர்.