'ஸ்மார்ட் கார்டு' வாங்காதவர்களுக்கு மார்ச் முதல் ரேஷன் பொருள், 'கட்'

ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு, மார்ச் முதல், 'ஸ்மார்ட் கார்டு' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.

இவற்றை வாங்குவதற்கு, ரேஷன் கார்டு அவசியம். காகிதத்தில் இருந்த ரேஷன் கார்டுகளுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை, 2017 ஏப்ரலில், உணவு வழங்கல் துறை துவக்கியது.
ஸ்மார்ட் கார்டுக்காக, மத்திய அரசு வழங்கிய, 'ஆதார்' கார்டில் இருந்த விபரங்களை, உணவுத் துறை அதிகாரிகள் பெற்றனர். அதில், முகவரி, பெயரில் பிழை இருந்ததுடன், புகைப்படமும் தெளிவாக இல்லை. இதனால், சரியான விபரங்களை வழங்குமாறு, மக்களிடம், அதிகாரிகள் கேட்டனர். பலர் ஆர்வம் காட்டாததால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமானது.
தற்போது, 1.94 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் இன்னும், 1.80 லட்சம் பேருக்கு தான் ஸ்மார்ட் கார்டு தர வேண்டியுள்ளது. அந்த கார்டுதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவித்தும்; வீடுகளுக்கு, ரேஷன் ஊழியர்கள், நேரில் சென்று வலியுறுத்தியும், சரியான விபரங்கள் தராமல் உள்ளனர். இதனால், அந்த கார்டுகளை, போலி பட்டியலில் சேர்ப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு, மார்ச் முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, உணவுத் துறை அமைச்சர், காமராஜ் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி, 99 சதவீதம் முடிவடைந்து உள்ளது. பிப்., 15க்குள், அனைவருக்கும் கார்டு வழங்கப்பட்டு விடும்.
மார்ச் முதல், அந்த கார்டு இல்லாதவர்களுக்கு, ரேஷன் கிடையாது. வழக்கம் போல் பொருட்கள் வாங்க, ஸ்மார்ட் கார்டு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

6 லட்சம் கார்டுகள் : ரேஷன் கடைகளுக்கு அனுப்பும், ஸ்மார்ட் கார்டின் கடைசி நான்கு எண்களை, கடை ஊழியர்கள், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்து, அந்த கார்டை, கருவியில் ஸ்கேன் செய்தால், செயலுக்கு வந்துவிடும். இதையடுத்து, கடையில் பொருட்கள் வாங்க முடியும். ஆனால், கடை ஊழியர்கள் அவ்வாறு செய்யாமல், கார்டை வழங்கி உள்ளனர். அதனால், ஸ்மார்ட் கார்டு வாங்கியதில், ஆறு லட்சம் பேர், இதுவரை பொருட்களை வாங்காமல் உள்ளனர்.