மாநில பாடத்திட்ட அடிப்படையில் நீட்தேர்வு கேள்விகள்: மத்திய அரசு

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து, நீட்தேர்வு கேள்விகளை
தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் பல்வேறு பாடத்திட்டங்களை வைத்து கேள்விகள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


தற்போது வரை நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் பல மாநிலங்களில் வித்தியாசப்படுகின்றன. 


மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இன்று நீட் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாநில பாடத்திட்டங்களையும் பரிசீலித்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்பது பின்னடைவாக இருக்காது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், எந்த மாநில மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க முடியும் என்றார்