சத்தமே இல்லாமல் 75 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை; மும்பையில் உச்சம்

மும்பை: கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்திருக்கின்றன.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.09 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இரு முறை மாற்றியமைத்து வந்த நடைமுறையை ஜூன் மாதம் கைவிட்டது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.80.25க்கு இன்று விற்பனையாகிறது. தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மும்பையில் முதல் முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80 ஐ தொட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயிக்கும் முறை அமலில் இருந்த போது, விலை உயரும் போது ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டாலும், குறையும் போது சில காசுகள் குறைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், அப்போதும் ஏறுவதும், இறங்குவதும் கண்கூடாகத் தெரிந்தது.

ஆனால், தற்போது சத்தமே இல்லாமல் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75 ஆகியிருப்பது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலையும் ஒரு லிட்டர் ரூ.66.64 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மறைமுகமாக உயரும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏற்கனவே பேருந்துக் கட்டண உயர்வால் மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மறைமுகமாக பெட்ரோல், டீசல் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மக்களுக்கு பேரிடியாகவே உள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.