முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவ மழை!

'வட கிழக்கு பருவமழை காலம், அடுத்த வாரம் முடிவுக்கு வருகிறது. வரும் வாரத்திலும், மழை குறைவாகவே இருக்கும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை, அக்., 27ல் துவங்கியது; அக்., 29ல், மழை தீவிரமானது. முதற்கட்ட மழையில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இறுதி கட்டமாக, டிச., 1ல், குமரியில், 'ஒக்கி' புயலால், மழை வெள்ளம் உட்பட, பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், இரண்டு வாரங்களாக, தமிழக கடலோர மாவட்டங்களில், வறண்ட வானிலையே நிலவுகிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்கிறது. நேற்றும், நேற்று முன்தினமும், டெல்டா மாவட்டங்களில் மட்டும், அதிகபட்சம், 2 செ.மீ., பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், வட கிழக்கு பருவமழை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது, வட கிழக்கில் இருந்து, பருவக்காற்று மட்டும் வீசுகிறது. ஆனால், காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால், குறிப்பிடும்படி மழை இல்லை; பனிமூட்டம் மட்டுமே நிலவுகிறது.
'இதையடுத்து, வரும் நாட்களில் இயல்பை விட, பருவமழை குறைவாகவே இருக்கும். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில், சில இடங்களில் மட்டும், மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர். -