திருநள்ளாறில் இன்று சனிப்பெயர்ச்சி விழா


திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி செய்யப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடுகளை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது டிஜிபி சுனில்குமார் கௌதம், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: திருநள்ளாறு கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழா நாளிலும், பின்னர் வரக்கூடிய சனிக்கிழமைகளிலும் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வர். இதையொட்டி புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்துள்ளது. கட்டண வரிசை, கட்டணமில்லா வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு அளிக்கும் அன்னதானம், ரொட்டி உள்ளிட்ட சிறு உணவு வகைகள் அனைவரையும் திருப்திப்படுத்தும்.
நளன் குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும், பக்தர்கள் தாமதமின்றி தரிசனம் செய்து திரும்பவும், சனீஸ்வரனுக்கு முன்பாக மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேசுவரரையும் தரிசித்து வரும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸார் சுமார் 1,400 பேரும், அரசுத்துறையினர் 400 பேரும் களப்பணியில் இருப்பார்கள். பக்தர்களுக்கு பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த அச்சமும் கொள்ளாமல் பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து செல்லலாம் என்றார் .
பின்னர் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த போலீஸாருக்கு பக்தர்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து விளக்கும் கூட்டம் திருநள்ளாறில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டு, விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உதவும் பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது. பக்தர்களுக்கு யாராலும் தொந்தரவு இல்லாத வகையிலும், பக்தர்கள் மனம் நோகாத வகையிலும் காவல்துறையினரின் செயல்பாடுகள் அமையவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
படகில் கண்காணிப்புப் பணி: சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக நளன் குளத்தில் படகில் கண்காணிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. நளன் குளத்தில் ரப்பர் படகு கண்காணிப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிவைத்தார். கோயில் நிர்வாக அலுவலர் ஏ.விக்ராந்த் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குளத்தின் நான்கு புறத்திலும் படகு சுற்றி வந்து கண்காணிப்பை மேற்கொள்ளும். இதற்கென மீனவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நளன் குளத்தின் அருகே தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோயிலில் மலர் அலங்காரம்
பெங்களூருவிலிருந்து வரவழைக்கப்பட்ட மலர்கள் மூலம் திருநள்ளாறில் மூலவர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னிதிகளில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில், பக்தர் ஒருவரின் நன்கொடையாக ரூ.5 லட்சம் செலவில், பெங்களூருவிலிருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு சன்னிதிகள் அலங்கரிக்கும் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியில் சுமார் 50 ஊழியர்கள் ஈடுபட்டு, பக்தர்களைக் கவரும் வகையில் வண்ண மலர்களால் மலர் தோரணம், மாலை, பந்தல் அமைப்பை செய்துள்ளனர். குறிப்பாக ஸ்ரீ சனீஸ்வரபகவான் சன்னிதி, ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சன்னிதிக்கு செல்லும் வழி, கோபுர வாயில் உள்ளிட்ட பல இடங்களில் செய்துள்ளனர். இவை செவ்வாய்க்கிழமை இரவு வரை வாடாமல் அதே வண்ணத்தில் இருக்கும்.
திருநள்ளாறு கோயிலில் இதுபோன்ற மலர் அலங்கார ஏற்பாடு முன்னெப்போதும் செய்தது இல்லை என கோயில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி 3 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நடைபெறக்கூடிய சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, காரைக்கால் வரை சிறப்பு ரயில்களை இயக்க புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ரயில்வே நிர்வாகத்துக்கு கடந்த நவ.28-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்தக் கடிதத்தை மேற்கோள்காட்டி, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், முதல்வர் வி.நாராயணசாமிக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடித விவரத்தை, காரைக்காலில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெளியிட்டார். காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயில் எண் 16187, 16188 மற்றும் மயிலாடுதுறை - மைசூர் விரைவில் ரயில் எண் 16231, 16232 ஆகியவற்றில் தலா ஒரு 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், திருச்சி - காரைக்கால் ரயில் எண் 56714, 56711 ஆகியவற்றில் 5 கூடுதல் பெட்டிகள் 2-ஆம் வகுப்பு வசதி கொண்டது 19-ஆம் தேதி வரை இணைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!