வாடிக்கையாளர்கள் புகார் எதிரொலி: ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆதார் பதிய அளிக்கப்பட்ட உரிமம் ரத்து

ஏர்டெல் செல்லிடப் பேசி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் செல்லிடப் பேசி எண்ணில் ஆதார் பதிய அளிக்கப்பட்ட உரிமத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ரத்து செய்துள்ளது.

ஏர்டெல் செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும்போது, அவர்களின் அனுமதியின்றி ஏர்டெல் பேமெண்ட் வங்கிக் கணக்கை அந்நிறுவனம் தொடங்குவதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு புகார்கள் வந்தன. வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு வராமலேயே, இந்தக் கணக்குக்கு சமையல் எரிவாயு உருளைக்கு அரசு வழங்கும் மானியம் செல்வதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், "பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட் வங்கி ஆகியவற்றுக்கு ஆதார் பதிவு செய்ய அளிக்கப்பட்ட உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உத்தரவையடுத்து, ஏர்டெல் நிறுவனத்தால் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணை ஆதாருடன் இணைக்க முடியாது. அதேபோல், ஏர்டெல் பேமெண்ட் வங்கியாலும், ஆதார் தகவலைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கை திறக்க முடியாது.
இதை ஏர்டெல் நிறுவன செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புகிறோம்' என்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!