புதிய வரைவுப் பாடத் திட்டம்: இணையத்தில் இதுவரை 25 லட்சம் பேர் பார்வை, 7,500-க்கும் மேற்பட்டோர் கருத்து

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் பாடத் திட்டம் குறித்து 7,500-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.




 தமிழகப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டம் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய வரைவுப் பாடத் திட்டத்தை வடிவமைத்தனர்.

இதற்கான வரைவு தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவ.20-ஆம் தேதி வெளியிட்டார். இதையடுத்து இந்த வரைவுப் பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் என்ற வலைதளத்தில் கடந்த நவ.21-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 29-ஆம் தேதி வரை என இருந்த நிலையில் இதை மேலும் நீட்டிக்க வேண்டும்

என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதனால் டிச.5 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த கால அவகாசத்தை மேலும் சில நாள்கள் நீட்டிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13 நாள்களில் புதிய வரைவுப் பாடத் திட்டத்தை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டு அது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

2.5 லட்சம் முறை பதிவிறக்கம்: இணையதளம் மூலமாக பெறப்பட்ட கருத்துகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

புதிய வரைவுப் பாடத் திட்டத்தை இதுவரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2.5 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 7,500-க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப் பாடத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) , சிபிஎஸ்இ, பிற மாநிலங்களின் பாடத் திட்டங்களை ஆய்வு செய்து தேவையான பகுதிகளை உள்ளீடு செய்திருப்பது, ஒவ்வொரு பாடத்துக்கும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகம், ஜாமெட்ரிக் பாடத்தின் எளிமை, மெய்நிகர் வகுப்பறை ("வெர்ச்சுவல் கிளாஸ்'), திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) போன்ற விஷயங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ரோபோடிக், நானோ சயின்ஸ், பாலியல் பேதங்கள் மற்றும் பிரச்னைகள் மற்றும் மேல்நிலைப் பாடத் திட்டங்களுக்கு பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் பரிசீலனை: அதேபோன்று தொடக்கக் கல்வியில் மேலும் சில புதிய விஷயங்களைச் சேர்க்க வேண்டும். புதிதாக இடம்பெற்ற விஷயங்கள் அனைத்தும் நடைமுறையிலும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக இணையதளம் மூலமாக பெறப்பட்ட கருத்துகளில் ஏற்கத் தகுந்தவை உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.

தரமான தாள்களில் அச்சிட வேண்டும்...

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கூறுகையில், புதிய வரைவு பாடத் திட்டம் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் இந்தப் பாடங்களை கற்பிக்கவும், கற்கவும் ஏற்ற சூழலை அனைத்து பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும். புதிய பாட நூல்களை எழுதுவதற்கு தகுதியான ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்ய வேண்டும். தொடக்க கல்வி பாடநூல்கள் வண்ணமயமாகவும், அனைத்து புத்தகங்களும் தரமான தாள்களிலும் அச்சிடப்பட வேண்டும் என்றனர்.