2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் குழு அமைப்பு

தமிழகத்தில் உள்ள 523 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பி.., பி.டெக். இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. இதற்காக மாணவர்கள் பெற்றோருடன் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு வந்து சென்றனர்.
இனி 2018-ம் ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக அதிகாரியான, பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். மாணவர்கள் அவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான தேதிகள் கொடுக்கப்படும். உதாரணமாக அவர்களுக்கு 5 நாட்கள் வரை வாய்ப்பு கொடுக்கப்படும்.

இதில் ஒரு நாளில் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். 2017-ம் ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வில் முதல் தரமான கல்லூரிகளை தேர்ந்தெடுத்த சில மாணவர்கள் பின்னர் மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்பில் இடம் கிடைத்து அதில் சேர்ந்துவிட்டனர். இதனால் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, எம்..டி. கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் 300 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது. அதுபோல் காலி இடங்கள் ஏற்படுவதை தடுக்கவே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் நிச்சயம் காலி இடங்கள் ஏற்படாது.