பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர்வு எழுதிய 196 பேர் மீது போலீசில் புகார்

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதன்பின்னர் பெறப்பட்ட புகார் மனுக்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் திரும்ப பெறப்பட்டன. அனைத்து தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது. இதனையடுத்து தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

196 பேர் மீது புகார்

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நடத்திய எழுத்துத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. ஏற்கனவே வெளியிட்ட மதிப்பெண்களுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 60 முதல் 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் உள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 196 பேர் தவறு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் மதிப்பெண்கள், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ளதை விட அதிகமாக உள்ளது. தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதற்காக அவர்கள் யாரையெல்லாம் அணுகினார்கள்?, எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?, இடைத்தரகர்கள் யார்?, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் யார்? ஆகியவை பற்றி விசாரிப்பதற்காக தேர்வு எழுதிய 196 பேர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம். போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தற்காலிக பணிநீக்கம்

தவறு செய்த 196 பேரின் முகவரியும், ஆசிரியர் தேர்வு வாரிய செயல்பாடுகள் பற்றிய முழுவிவரத்தையும் போலீசில் கொடுத்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலக பணியாளர்களின் வேலை பற்றிய விவரமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்களின் உதவி இல்லாமல் தேர்வில் முறைகேடு நடந்திருக்காது. எனவே மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.