டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.


இது குறித்து, தமிழ்நாடு அரசு பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: மருத்துவ படிப்பை முடித்து, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களாக பணியில் இணைபவர்கள், முதல் நான்கு ஆண்டுகள் வரை, 56 ஆயிரத்து, 100 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் பணி செய்கின்றனர்.
அதன் பின்னரே, மத்திய, மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்தில், முரண்பாடு துவங்குகிறது.
ஐந்து முதல், 10வது ஆண்டு வரை, மாநில அரசு டாக்டர்களை விட, மத்திய அரசு டாக்டர்களின் சம்பளத்தில், மாதத்துக்கு, 5,000 ரூபாய் கூடுதல் என்ற வகையில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதே பணியில், 13 முதல், 20 ஆண்டுகள் முடிக்கும் நிலையில், மாநில டாக்டர்களை விட மத்திய அரசு டாக்டர்கள், மாதத்துக்கு, 39 முதல், 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு ஐந்து முதல், ஏழு லட்சம் ரூபாய் வரை, கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியில் உள்ள டாக்டர்களின் சம்பள முரண்பாடு இதுவென்றால், எம்.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்பு டாக்டர்களின் சம்பள விகித முரண்பாடுகள் இதைவிட அதிகமாக உள்ளன. தமிழக அரசு டாக்டர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக, பிறப்பித்த அரசாணை எண், 354ல் உள்ள சில கருத்துக்களை முன் வைத்து, நாளை சென்னையில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், டாக்டர்கள் சங்கங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் குறித்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.