Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 13, 2017

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடங்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, கையேடு வெளியிட்டு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, பல்வேறு துறைகளைச் சார்ந்த உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களாலும், மிகச் சிறந்த மனித வளத்தினாலும், புதுமைகளின் முக்கிய மையமாகவும், இந்தியாவின் அறிவின் தலைநகராகவும் தமிழ்நாடு அறியப்படும்" என்று "தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை - 2023"- கையேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதை மெய்ப்பிக்கும் வண்ணமாக, இன்றைய தினம், மாணவர்களின் அறிவுத் திறனை மேலும் மெருகூட்டி, அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் இப்பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து அதற்கான நூல்களை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
தகுதி நுழைவு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல் உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு எடுத்த முடிவின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும், ஸ்பீடு அறக்கட்டளையும் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது இன்று செயல் வடிவம் பெறுகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் பயன் பெறுவர். இதுவரை இப்பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக 73 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டமானது இவ்வாண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இப்பயிற்சி மையத்தினை, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 412 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்றைய தினத்தில் முதல் கட்டமாக 100 மையங்களில் இப்பயிற்சி தொடங்கப்படுகிறது. மிக விரைவில் மீதமுள்ள 312 மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணத்தையும் பெறாமல் 12ஆம் வகுப்புக்கு பின் தொழில்சார் பட்டப் படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் பாடப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் பயிற்று மொழியிலேயே மிகச் சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு இப்பாடங்கள் நடத்தப்படும்.
இதற்கான பாடப் பகுதிகள் மாணவர்களுக்கு 30 பயிற்சி கட்டகங்கள், அதாவது 30 புத்தகங்களாக வழங்கப்படும்.

பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்விதத் தேக்கமும் அடையா வண்ணம், மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொதுத் தேர்வு முடிவடைந்த பிறகு தினந்தோறும் இதே நேரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கொள்குறி வகை வினாக்களும் மற்றும் அதன் பாடப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் அனைத்திந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி நிறையவே எழுந்து கொண்டிருக்கின்றன.
நான் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுவேன். தற்பொழுது உள்ள நம் மாநில பாடத் திட்டம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பாடத் திட்டத்திற்கும் சளைத்தது அல்ல. அத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நம் மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிப்பதே தற்போதைய தேவையாகும்.
மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி கட்டணமின்றி வழங்கப்பட உள்ளதால் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேறு எந்தப் பயிற்சியும் எடுத்துக் கொள்ள தேவையும் இல்லை; அதற்கென வேறு எந்த செலவினமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment