பள்ளி மாணவ - மாணவியருக்கு தனி பஸ் : விரைவில் நடவடிக்கை: அமைச்சர் உறுதி

கரூர்: ''பள்ளி மாணவ - மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:


சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, ஏஜன்சிகள் மூலம், போக்குவரத்து விதிமுறைகள், வாகனம் ஓட்டும் முறைகள் குறித்து, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.


சாலை பாதுகாப்புக்காக ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் என்பதை, 65 கோடி ரூபாயாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். 


தரமான ஓட்டுனர்களை உருவாக்க திட்டமிட்டு, ஓட்டுனர் உரிமம் பெற, தமிழகம் முழுவதும், 14 இடங்களில், கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பயிற்சி மையம், வட்டார போக்குவரத்து மையங்களில் அமைய உள்ளது.


பள்ளி மாணவ - மாணவியருக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க, அவர்களுக்கென, தனி அரசு பஸ்கள் இயக்குவது குறித்து, நீதிமன்ற ஆலோசனைப்படி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 


அதிகளவில் மாணவர்கள் செல்லும் வழித்தடங்களை கண்டறிய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரூரில் இருந்து, கோவை வரை, ஆறு வழிச்சாலை அமைக்கும் வகையில், நிலம் கையகப்படுத்த வருவாய் துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.


இவ்வாறு அவர் கூறினார்.