இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலி: அதிர வைத்த ஆய்வறிக்கை!

புதுதில்லி: குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலியானது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக சுகாதார அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் பல்வேறு விதமான மருந்துகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்றில்தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10.5 சதவீத மருந்துகள் போலியானவையாகும்.
இந்த மருந்துகள் யாவும் நோய்களை முறையாக குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து மரணமடையும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு இம்மருந்துகளே காரணமாக உள்ளது.
வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் மருந்துகள் தரமானதாக இருந்தாலும் அது நோய்களை முழுவதும் குணப்படுத்துவது கிடையாது. கடந்த நான்கு ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பானது புற்றுநோய் மருந்துகளில் துவங்கி கருத்தடை வரை, நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் இருந்து தடுப்பூசிகள் வரை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பிரிவுகளிலும் தரக்குறைவான அல்லது போலியான மருத்துவ பொருட்கள் பற்றிய முழுமையான அறிக்கையை பெற்றுள்ளது.
இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கெபிரேயஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!