மின் வாரிய தேர்வு மதிப்பெண் வெளியீடு

சென்னை: மின் வாரியம், நேற்று முன்தினம் நடத்திய, கள உதவியாளர் தேர்வுக்கான நேர்காணல் மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மின் வாரியம், 900 கள
உதவியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, 2016ல் நடத்திய எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, நேற்று முன்தினம், நேர்காணல் துவங்கியது; இன்று வரை நடக்கிறது. இந்நிலையில், 20ம் தேதி நேர்காணலில் பங்கேற்ற வர்கள் வாங்கிய மதிப்பெண்ணை, மின் வாரியம், தன் இணையதளத்தில், நேற்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதிப்பெண் விபரம் வெளியிட தாமதமானால், தங்களுக்கு வேண்டியவருக்கு வேலை தருமாறு, அரசியல் குறுக்கீடுகள் வரும்.
அதற்கு இடம் தராத வகையில், தினமும் நேர்காணல் முடிந்ததும், எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண், கல்வி தகுதி மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் ஆகிய மூன்றையும், 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு, அதில், தேர்வர் வாங்கிய மதிப்பெண் வெளியிடப்பட்டது. இதேபோல், 21, 22ல் நேர்காணல் முடிந்ததும், மதிப்பெண் வெளியிடப்படும்.
இறுதியாக, இன, இட மற்றும் தகுதி அடிப்படையில், உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.