ஆங்கிலம் கற்பிக்கும் பார்வையற்ற ஆசிரியர்

கோபி: பிறவியிலேயே பார்வையற்ற ஆசிரியர், கோபி மகளிர் பள்ளி மாணவியருக்கு, அசத்தலாக ஆங்கில பாடம் கற்பிக்கிறார்.

ஈரோடு மாவட்டம், கோபி, முருகன்புதுாரில், நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஆறு முதல், பிளஸ் 2 வரை, 360 மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட, 20 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கோபியைச் சேர்ந்த, வடிவேல் என்ற, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், பிறவியிலேயே பார்வையற்றவர். இவர், 8 - 10ம் வகுப்புக்கு, ஆங்கில பாடம் போதிக்கிறார். ஆங்கில பாடத்தில், எம்.ஏ., -- பி.எட்., முடித்த வடிவேல், துவக்கப் பள்ளி முதல், 'பிரெய்லி' முறையில் படித்தவர். தந்தை கிருஷ்ணன், தினமும் வடிவேலை பள்ளியில் விட்டு, மாலையில் அழைத்து செல்கிறார்.
ஆசிரியர், வடிவேல் கூறியதாவது:

எனக்கு பிறந்தது முதல், 100 சதவீதம் பார்வை கிடையாது. சிறு வயது முதலே, ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் முயற்சிக்கு, பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். திருமணத்துக்கு பின், மனைவியும் வழிகாட்டியாக உள்ளார். 100 சதவீதம் பாடம் சார்ந்து, தயார் நிலையில் இருந்தால் தான், வகுப்பில் எளிதாக ஆங்கிலம் கற்பிக்க முடியும். பாடப் புத்தகங்களை, பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளேன். ஆங்கிலம் வாசித்தல் மற்றும் உச்சரிப்புக்கு, சிறப்பு கவனம் செலுத்துவேன். தினமும் அதிகாலை எழுந்து, நண்பர்களுடன் நடைபயிற்சி செல்வேன். காலை, 9 மணிக்கு முன், பள்ளியில் ஆஜராகி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.