டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து

'டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து கொடுக்கும் கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு, டாக்டர்களின் ஆலோசனை பெறாமல், பொதுமக்கள் தாமாக மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்வதால், நோய் வீரியம் பெற்று, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், 'டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல், மருந்துகள் விற்கக் கூடாது' என, சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஆனாலும், மருந்து கடைகளே, நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப, மருந்துகளை விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 52 ஆயிரம் மொத்த, சில்லரை மருந்து விற்பனை கடைகள் உள்ளன. டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளோம். மருந்து கடைகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.