புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை: தென் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். ஸ்டெல்லா கூறியது: தமிழகத்தில் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டிருந்தது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென் இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக அடுத்த இரு நாள்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும் வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிள் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
கனமழைக்கு வாய்ப்பு: தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு சிலமுறை மிதமான மழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 கி.மீ.

முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த கடல் காற்று வீசும். இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை அக். 1-ஆம் தேதி முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 270 மி.மீ.

மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 21 சதவீதம் குறைவு என்றார் இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தென் மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக் கடலில் நவ.29-ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.