தமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு

சென்னை: 'சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுவையில், சில இடங்களிலும் கன மழை பெய்யும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில், அக்., 27 முதல், வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் டெல்டா மாவட்டங்களில், அக்., 29 முதல், கன மழை கொட்டியது. நவ., 4க்கு பின், மழை குறைந்து, தென் மாவட்டங்களில் மிதமாக பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், மீண்டும், சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களில் மழை துவங்கியது. இந்த முறை, கன மழையாக பெய்யாமல், விட்டு விட்டு மிதமாக பெய்து வருகிறது.

இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு, இரண்டு நாட்களில் நகர்ந்து விடும்.

தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகர்வதால், இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து, பின்னர், படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.