'நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்

சென்னை : போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார். இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு: தமிழகத்தில், 12 மாவட்டங்களிலும், 'ஹெல்ப் லைன்' வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. 72 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை, வரும், 8ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.