போட்டி தேர்வு பயிற்சி வகுப்புக்கு 73 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

சாரண-சாரணியர் இயக்கத்தில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தலைமை பண்புக்கான பயிற்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சாரணர் இயக்கம் தன்னலம் கருதாது சேவை செய்து வருகிறது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு, உலகளவில் 216 நாடுகளில் 4 கோடி பேர் இதில் உள்ளனர். தமிழகத்தில் சாரண-சாரணியர் இயக்கம் பயிற்சி அளிக்க ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரிடம் இதுதொடர்பாக பேசி அவர்களுக்கு வைப்பு நிதியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டு, அதன் மூலம் வரும் ஆண்டுக்கு வட்டித்தொகை ரூ.20 லட்சத்தை கூடுதலாக அவர்கள் பெறுவதற்கான ஆணை பெற்று தந்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில மாணவ-மாணவிகளின் புத்தகங்கள் மழையால் நனைந்து போய் இருக்கின்றன. அவர்களுக்கு மாற்று புத்தகம் வழங்கப்படுமா?

பதில்:- எங்கெங்கு புத்தகம் சேதம் அடைந்து இருக்கிறது என்று சொன்னால், அவர்களுக்கு மாற்று புத்தகங்கள் வழங்கப்படும்.

கேள்வி:- மழைக்காலங்களில் விடுமுறை விடுவதற்கு கல்வித்துறை வசம் இருந்தது. இப்போது அது மாவட்ட கலெக்டர் வசம் சென்றுள்ளது. அதனால் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு வருகிறதே?

பதில்:- இதுதொடர்பாக முதல்-அமைச்சரோடு கலந்து பேசி விரைவில் அறிவிப்போம்.

கேள்வி:- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கட்டிடங்கள் அதிகளவில் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வருகிறதே?

பதில்:- அப்படி இல்லை. பயன்படுத்த முடியாத அளவில் சில கட்டிடங்கள் இருக்கிறது. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டி உள்ளது. அதை அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், பொறியாளர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

கேள்வி:- போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்?

பதில்:- இதுவரை 73 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களிலே அது தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.