நகரத் தொடங்கியது ஓகி புயல்: மணிக்கு 65-75 கி.மீ. வேகத்தில் காற்று; ரயில்கள் ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு தென் திசையில் 60 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த ஓகி புயல் தென்மேற்கு திசையில் மெல்ல நகர்ந்து செல்கிறது.

கன்னியாகுமரியில் இருந்து மெல்ல விலகிச் செல்லத் தொடங்கிய ஓகி புயல், தென் திசையில் இருந்து தென்மேற்காக லட்சத் தீவு பகுதியை நோக்கி நகர்ந்து தற்போது 70 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி, நாகை துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்துக்குக் காற்று வீசி வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் மரங்கள் சாய்ந்துகிடப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில்களை இயக்கும் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதால் ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் அறிவிப்பு வருவதற்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க 200 படகுகளில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.

மாயமான மீனவர்களை மீட்க கடலோரக் காவல்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!