4 மாணவிகள் தற்கொலை வழக்கு: தாற்காலிக ஆசிரியர்கள் இருவர் பணிநீக்கம்



அரக்கோணம்: அரக்கோணம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தாற்காலிக ஆசிரியர்கள் இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகள் தற்கொலை குறித்து விசாரித்த விசாரணைக் குழுவினரிடம், பள்ளி மாணவிகள் அளித்த தகவலின் அடிப்படையில், தாற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த லில்லி, சிவக்குமாரியை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திதையடுத்து அப்பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 மாணவிகள் பிளஸ் 1 படித்து வந்தனர். இந்த 4 மாணவிகளும் சரியாகப் படிக்காததால் வகுப்பாசிரியை, அவர்கள் 4 பேரையும் வெள்ளிக்கிழமை திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து மாணவிகள் 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாணவிகளின் தற்கொலைக்கான காரணங்களை அறிய, கல்வித் துறையினரும், காவல் துறையினரும் தனித் தனியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார்.

மேலும், பள்ளியில் ஆசிரியைகளிடம் ஏடிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், சனிக்கிழமை மாணவிகளின் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்ய முயன்ற போது, அவர்களின் உறவினர்கள் மற்றும் பனப்பாக்கம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து கல்வித் துறையிடம் இருந்த அறிக்கை பெற்ற ஆட்சியர், சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அவர், பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பாசிரியை மீனாட்சி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியை லில்லியையும் பணியில் இருந்து நிறுத்த உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!