ஆசிரியர்களுக்கு கிடைத்தது 4 மாத சம்பளம் : தினமலர் செய்தி எதிரொலி

வத்திராயிருப்பு: தரம் உயர்த்தப்பட்ட உயர் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நான்கு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம், 'தினமலர் 'செய்தியால் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் இந்தாண்டு 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய பணியிடங்களின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்வதற்காக அவர்களுக்கான சம்பளம் ஆகஸ்ட் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் சிரமமப்பட்டனர்.இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் நவ .5ல் செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த வாரம்மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டது. இதனால் தரம் உயர்த்தப்பட்ட உயர்
நிலைப் பள்ளி ஆசிரியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று (நவ. 17) அரசு விரைவு சம்பள பட்டியலை அறிவித்து உத்தரவிட்டது. இது குறித்துஅரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவு பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி இயக்குனர்கள், கலெக்டர்கள், கருவூலக அதிகாரிகளுக்கு இ மெயில் மூலம் அனுப்பப்பட்டது.
அதில்' பள்ளிகள் தரம் உயர்ந்ததால் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க' உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில் ,'இப்பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற தினமலர் நாளிதழ் உதவியால், எங்களின் சம்பளம் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது,' என்றனர்.