அரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை: 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - DINAMANI

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகளைத் தொடர்ந்து திட்டி வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், திங்கட்கிழமை பள்ளி திறந்த பிறகு மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி:
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 மாணவிகள் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 பேர் அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். ஒரே வகுப்பில் படித்து வந்த இவர்கள் 4 பேரும் சரியாகப் படிக்கவில்லை என புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாணவிகள் 4 பேரும் வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு வந்துள்ளனர். காலையில் வகுப்பில் அமர்ந்து பாடங்களை பயின்றதாகத் தெரிகிறது. பிற்பகலில் இந்த 4 மாணவிகளும் திடீரென பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டனர்.
இந்நிலையில், அந்த 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் உள்ள 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிணற்றின் அருகே இருந்த இவர்களது புத்தகப் பை, செருப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
தகவலறிந்து அங்கு சென்ற ராணிப்பேட்டை, அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து ரேவதி, சங்கரி, தீபா, மனீஷா ஆகிய 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பகலவன், டி.எஸ்.பி. குத்தாலிங்கம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அப்துல் முனீர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன? சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த 4 மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மாணவிகள் குதித்து தற்கொலை செய்து கொண்ட கிணறு.