மருத்துவ படிப்பில் கூடுதலாக 310 இடங்கள் : எம்.சி.ஐ., அனுமதி கோரும் தமிழக அரசு

சென்னை: மருத்துவ படிப்புகளில், கூடுதலாக, 310 இடங்களுக்கு அனுமதி கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியுடன் சேர்த்து, 3,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 456 இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு செல்கின்றன.
வரும், 2018 - 19ம் கல்வியாண்டில், மதுரை மற்றும் நெல்லை மருத்துவ கல்லுாரிகளில், தலா, 100 இடங்கள்; செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரியில், 50 இடங்களை கூடுதலாக அனுமதிக்க கோரி, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.
அதேபோல, 13 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,489 எம்.டி., - எம்.எஸ்., எனப்படும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இவற்றில், 60 இடங்களை கூடுதலாக கேட்டு, தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 250 இடங்களுக்கும், முதுநிலை மருத்துவ படிப்புக்கு, 60 இடங்களுக்கும் அனுமதி கோரி, எம்.சி.ஐ.,யிடம் விண்ணப்பித்து உள்ளோம்.
அனுமதி கிடைத்தால், வரும் கல்வியாண்டில், 310 கூடுதல் மருத்துவ இடங்களுக்கும் சேர்த்து, கவுன்சிலிங் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.