அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது. இதில், 24 புகார் மனுக்கள் இருந்தன. தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, தர்மபுரி டவுன் மகளிர் போலீசார் சார்பாக, 15ம் தேதி, புகார் பெட்டி வைக்கப்பட்டது. 


இதில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் வெளியில் சொல்ல முடியாத புகார்களை, மாணவியர் பெயர் குறிப்பிடாமல், மனுவாக எழுதி போடலாம் என, அறிவுறுத்தப்பட்டது. நேற்று முன்தினம், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ், எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, இந்த பெட்டியை திறந்தார். இதில், 24 புகார்கள் இருந்தன. அதில், பள்ளிக்கு வரும் மாணவியரை கேலி, கிண்டல் செய்யும் வாலிபர்கள், பஸ்சில் பயணம் செய்யும் போது தொந்தரவு கொடுப்பவர்கள்... மேலும், தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ள, 'பஸ் பாஸ்' கொண்டு வரும் மாணவியரை, தரக்குறைவாக பேசும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் என்பது உட்பட, 24 புகார்கள் இருந்தன.''இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்து, அதன் அடிப்படையில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.ஐ., கிருஷ்ணவேணி கூறினார்.