13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னை: 'கடலோரத்தில் உள்ள, ௧௩ மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


வட கிழக்கு பருவமழை குறித்து, நேற்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டி, இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் மழை தொடரும். வரும், ௨௪ மணி நேரத்தில், அதாவது, சனிக்கிழமை காலை, ௮:௩௦ மணி வரை, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில், சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், கடலோர பகுதிகளில், சில இடங்களில் கன மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.