TNPSC குரூப்–1 மெயின் தேர்வு 13–ந்தேதி தொடங்குகிறது; தேர்வு எழுதுவோருக்கு அறிவுரைகள்

தேர்வு எழுதும் பட்டதாரிகளுக்கு அறிவுரைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்–1 முதல் நிலை தேர்வை துணை கலெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்பட 89 உயர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 19–ந்தேதி நடத்தியது. தேர்வை 1 லட்சத்து 37 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 4 ஆயிரத்து 602 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர்.



நாளை மறு நாள் (13–ந்தேதி) குரூப்– 1 மெயின் தேர்வு தொடங்கி 15–ந்தேதி முடிவடைகிறது.
இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
*விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி குறிப்பாணையுடன் தேர்வுமையத்திற்கு, தேர்வு தொடங்குவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வரவேண்டும். மேலும், எக்காரணத்தை கொண்டும் தேர்வு தொடங்கிய 30 நிமிடத்திற்கு பின் தேர்வு கூடத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்திற்குள் நுழையும் முன்பு சோதனைக்குட்படுத்தப்படுவார்கள். நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தவுள்ள பேனா ஆகியவை மட்டுமே தேர்வுக்கூடத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூடத்திற்கு செல்போன், மின்னணு சாதனங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
*விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், ஆய்வு அலுவலர் ஆகியோரிடம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைக் காண்பிக்க வேண்டும்.
*விண்ணப்பதாரர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே அமரவேண்டும். தேர்வுமையத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பு அடங்கிய உறையில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களுக்குரிய பதிவெண், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுடன் ஒப்பிட்டு சரியாக உள்ளதா? என்பதனை சரிபார்த்த பின்னரே உறையை பிரித்து எழுதத் துவங்க வேண்டும். இவ்வுறையின் மேல் விண்ணப்பதாரர்கள் கையொப்பமிட்ட பின் அறை கண்காணிப்பாளரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.
*விண்ணப்பதாரர்கள் தேர்வு விடைத்தாளில் எழுதாமல் விடப்பட்டுள்ள இடங்கள், பக்கங்களை தேர்வு எழுத பயன்படுத்திய அதே வண்ண மையினால் தவறாமல் அடித்து கோடிட வேண்டும்.
*விண்ணப்பதாரர்களுடன் கூட வரும் நபர்களுக்கு தேர்வுமையத்திற்குள் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
*விண்ணப்பதாரர்கள் இதர பொதுவான விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  மேற்கண்ட அறிவுரைகளை வே.ஷோபனா தெரிவித்துள்ளார்.