இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு!!

அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள் 
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மதுரை மாவட்டப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அனைத்துப் பள்ளிகளின் வளாகங்கள் தூய்மையாக வைக்கப்பட வேண்டும். குடிநீர்த் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும்.

வாரந்தோறும் குடிநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தினுள் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.


வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் திடீரென சோதனையிடலாம். அப்போது, தூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும்.


எனவே, அனைத்துப் பள்ளிகளும் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது