பருவ மழை : பள்ளிகளுக்கு அறிவுரை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவிருப்பதால் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் வட கிழக்கு பருவ மழை துவங்கும்; அடுத்த ஆண்டு ஜன., இரண்டாம் வாரம் வரை மழை நீடிக்கும்; 


தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்யும். புயல், வெள்ளம், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகள் வட 
கிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும்.அதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சென்னை உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படும். 


எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே பாடங்களை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழைக்கு விடுமுறை விட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தர வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.