Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 22, 2017

சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள்

சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அத்திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானால் ஏற்படும் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் 27அடி உயரத்தில் நின்றகோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் இவர்தான். இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் சேர்த்து இவரது உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். ஆகமங்களில் இவரது வாகனம் கழுகு என்று கூறப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களும் பறந்தோடிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரருக்கு முன், சுமார் 54அடி உயரமுள்ள மகாகணபதி அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் முதுகில் நாளை வா என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார். மேலும் 16 அடி உயரத்தில் (கல் விக்ரகம்) நவகிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது. இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் என்று அழைக்கிறார்கள். இங்கு 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. இங்குள்ள மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப்பது சிறப்பாகும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காட்டில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவி மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கி பொங்குசனியாக மாறினார். இங்கு சனி பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் வன்மீகநாதர்-கமலாம்பிகை (தியாகராஜர்) ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சனிபகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர் கிராமத்தில் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள சனி பகவான் தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டால் சனியின் தோஷம் விலகும்.
திருச்சி உறையூரில் கூரை இல்லாத சன்னதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோயிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டால் சனியின் தோஷங்கள் நீங்கும். மற்ற கோயில்களில் உள்ள சனி பகவானை வழிபட்டால் அங்கு தரும் விபூதி போன்ற பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டார்கள். ஆனால் இவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரிடமிருந்து கொண்டு செல்லும் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு சென்றால் மங்களம் பொங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சாவூர் கும்பகோணம்
நாகேஸ்வரர் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இங்குள்ள சனிபகவான், ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக் கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் நாச்சியார் கோவில்
அருகில் ராமநாதசுவாமி சமேத பர்வதவர்த்தினி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
தஞ்சாவூர் கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவிலில்
சனி பகவான் தன் இரு பத்தினிகளுடன் தனிச்சன்னதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
தஞ்சாவூர் குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் மேலக்காவிரியில் அமைந்துள்ள ஹயக்ரீவர் திருக்கோயிலை சனிப்பிரீதி செய்யும் தலம் எனப் போற்றுகின்றனர். சனிப் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம். தவிர, சனீஸ்வரரின் பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதிதேவிக்கு உகந்த தலமாக இருந்தாலும், சனிக்கிழமைகளில் இங்குள்ள அனுமரையும் சனீஸ்வரரையும் பக்தர்கள் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சனிப்பெயர்ச்சி ஹோமமும் இங்கு சிறப்புற நடைபெறுகிறது. வியாபாரம் செழிக்க, திருமணத் தடை நீங்க இங்கு வழிபடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-திருவைகாவூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டவர்த்தி எனும் ஊர். இங்கு தான்தோன்றிநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் தையல்நாயகி. மகா சிவராத்திரிக்குப் பெயர்பெற்ற தலமாக போற்றப்படும் இத்தலம் எமபயம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள தான்தோன்றி நாதரையும் தையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு.. இங்கு சனீஸ்வர பகவான், தனிச் சன்னதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, சனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்-கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, சனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். சனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!
தஞ்சாவூர் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள். இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை பொங்கு சனி என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
மதுரை சோழவந்தானில் உள்ளது சனீஸ்வர பகவான் திருக்கோயில். இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். விருச்சிக ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினம் வைதீசுவரன் கோயிலில் வைத்தியநாதரும், தையல்நாயகியும் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தவக்கோல சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார். காக வாகனத்தில் அமர்ந்துள்ள இவரது வலக்கையில் தண்டம் இருக்க, இடக்கை வரத முத்திரை காட்டுகிறது.
கரந்தை சிதாநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவான் வில், அம்பு, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயிலில் எழுந்தருளியுள்ள 18அடி உயர சாளக்கிராம ஆஞ்சநேயரையும், கன்னியாகுமரி சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் 18 உயர ஆஞ்சனேயரையும் வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும்.
திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோயில் வளாகத்தில் சக்கரத்தாழ்வாரும், நரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத பாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள பாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான பாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் பாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் புக்கா பொடி என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண்டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் அருள் பாலிப்பது வழக்கம். இவரை சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளியிருப்பார். ஒரே சமயத்தில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் வழிபடுவதால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி. இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.
dinamalar.com

No comments:

Post a Comment