அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு: டெங்குவை முறியடிக்க...

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், காய்ச்சல் காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் தமிழகத்துக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பல ஆண்டுகளாக இருப்பதுதான், சரியான தடுப்பு முறைகளாலும்
, முறையான மருத்துவ சிகிச்சையாலும் டெங்குவை முற்றிலும் குணப்படுத்திவிட முடியும் என்கின்றனர் கோவையின் பிரபல மருத்துவர்கள்.
டெங்கு காய்ச்சல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினரும், கோவை அஸ்வின் மருத்துவமனை தலைவருமான டாக்டர் எல்.பி.தங்கவேலு கூறுவதாவது: டெங்கு என்பது வைரஸ் மூலமாக வரக் கூடிய காய்ச்சல்களில் ஒன்று. இந்த வைரûஸ பரப்புவது ஏடிஸ் எனப்படும் கொசுக்கள். இந்த வகை கொசுக்கள் 16 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வளரக் கூடியவை. அதே போல, 60 முதல் 80 டிகிரி ஈரப்பதத்தில் வாழும். தென்னிந்தியாவில் நிலவும் காலநிலை ஏடிஸ் கொசு வளர்வதற்கு சாதகமாக உள்ளது.
இந்தக் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே முட்டையிடும். பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். இந்த வகை பெண் கொசுக்கள் முட்டையிடுவதற்கு புரதம் தேவை. அந்த புரதம் மனித ரத்தத்தில் இருந்து கிடைப்பதால் அது மனிதர்களைத் தேடிச் சென்று கடிக்கிறது.
டெங்கு பாதித்தவர்களைக் கடிக்கும் கொசு, மற்றவர்களையும் கடிக்க நேரிட்டால் ஒருவரிடம் இருந்து பலருக்கு டெங்கு காய்ச்சல் பரவும். பொதுவாக டெங்கு காய்ச்சல் என்பது ஒரே வகையான வைரஸால் வருவது என்கிற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் உண்மையில் டெங்கு காய்ச்சல் 4 விதமான வைரஸ்கள் மூலம் பரவுகின்றன.

டெங்கு காய்ச்சலின் நான்கு கட்டங்கள்
கடுமையான காய்ச்சல், கண்ணின் உள்புறத்தில் வலி, கடுமையான உடல் வலி, தலைவலி போன்றவை டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதல் கட்ட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கை-கால்களில் வலி இருக்கும். இரண்டாம் கட்டத்தில், வாந்தி, அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, சிறுநீர் குறைவாக வெளியேறுவது போன்றவை நிகழும். சிலருக்கு தோலில் தடிப்புகளும் தோன்றலாம்.

மூன்றாவது கட்டத்தில், வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது, முகம் வீங்குவது, அதிகப்படியான சோர்வு இருக்கும். 4-ஆவது கட்டத்தில் ரத்தத் தட்டணுக்கள் வெகுவாக குறைவதால் உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். குறிப்பாக தோலுக்கு அடியில், கல்லீரல், மூளை, உணவுப் பாதைகளில் ரத்தக் கசிவு இருக்கும். மேலும், ரத்த நாளங்களில் இருந்து பிளாஸ்மாக்கள் வெளியேறி நுரையீரல், வயிறு ஆகியவற்றில் நிரம்பும், இதன் காரணமாக ரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதை டெங்கு ஹெமராஜிக் சின்ட்ரோம் என்று அழைப்பார்கள். அதன் தொடர்ச்சியாக நாடித் துடிப்பு குறைந்து நோயாளி மயக்க நிலையை அடைவார். மூச்சு விட முடியாமல் கோமா நிலைக்குச் செல்லக் கூடிய அதிகப்படியான டெங்கு காய்ச்சல், டெங்கு ஷாக் சின்ட்ரோம் எனப்படும்.

எல்லா காய்ச்சல்களும் டெங்கு அல்ல...
தமிழகத்தில் தற்போது 60 முதல் 65 சதவீதம் பேருக்கு மழைக் காலங்களில் வழக்கமாக வரக் கூடிய சாதாரண காய்ச்சல் போன்று வேறு விதமான காய்ச்சல்கள்தான் வருகின்றன. 30 முதல் 35 சதவீதம் பேருக்கு மட்டுமே டெங்கு அல்லது கண்டறிய முடியாத காய்ச்சல்களாக இருக்கும். டெங்கு பாதித்தவர்களில் மேலே குறிப்பிடப்பட்ட 3, 4-ஆவது கட்டங்களில் மருத்துவமனைகளுக்கு வருபவர்கள்தான் அபாயகரமான டெங்கு நோயாளிகள் என்று கருதப்படுகின்றனர். தற்போது வரை 100 பேருக்கு டெங்கு வந்தால் அவர்களில் 80 சதவீதம் பேரை சாதாரண காய்ச்சல் நிலையிலேயே குணப்படுத்திவிட முடிகிறது. 20 சதவீதம் பேர் மட்டுமே அபாயகரமான நிலையில் வருவதால் அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர்.

முறையான சிகிச்சை என்ன?
பொதுவாக ஒருவர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார் என்றால் அவரின் நிலைக்குத் தகுந்தவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் எதிர் உயிரி மருந்து எனப்படும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படும். நீர்ச் சத்து குறைந்தவர்களுக்கு குழாய்கள் மூலம் குளுக்கோஸ் உள்ளிட்ட நீர்ச் சத்துகளை வழங்குவார்கள். டெங்குவைக் குணப்படுத்த ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாது. டெங்கு வந்துவிட்டால் இயற்கையாக இருக்கும் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். அதன் மூலம் வேறு விதமான நோய்கள் வரக் கூடும்.
குறிப்பாக வயிற்றுப் போக்கு, நுரையீரலில் சளி போன்ற தொற்றுகள் ஏற்படலாம். அதை குணப்படுத்துவதற்காகவும், வேறு தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவுமே ஆன்ட்டிபயாட்டிக் வழங்கப்படும். முதல் இரண்டு கட்டங்களில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவர்களின் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பார்த்து ஆன்ட்டிபயாட்டிக் வழங்கினால் 4 நாள்களில் டெங்கு குணமாகிவிடும்.

யாருக்கு ரத்தம் தேவை?
ரத்தத்தில் தட்டணுக்கள் எனப்படும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்களுக்கு ரத்தம் தேவைப்படும். நல்ல திடகாத்திரமான மனிதர்களுக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டரில் 1.50 லட்சம் முதல் 4.50 லட்சம் வரை இருக்க வேண்டும். இந்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் குறைந்தால் அவர்களுக்கு தானம் பெற்ற ரத்தத்தில் இருந்து தட்டணுக்களைப் பிரித்து செலுத்த வேண்டும்.
தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் நபர்களை உடனடியாகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவரது முக்கிய உறுப்புகள் பாதிக்காதவாறு சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். 10 பேர் தீவிர டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 2 பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவம் தேவைப்படும். அவர்களில் ஒருவர் மட்டுமே இறக்கக் கூடும்.

தடுப்பூசி உள்ளதா?
டெங்கு காய்ச்சல் இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்தே பரவி வருகிறது. தற்சமயம் 103 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது. இவற்றில் பல வளர்ந்த நாடுகளும் அடங்கும். உலக அளவில் சுமார் 55 கோடி மக்கள் ஆண்டுதோறும் டெங்கு பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக இந்தோனேஷியா, மெக்ஸிகோ, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உலக நாடுகளில் எங்குமே, இந்த மருந்தைக் கொடுத்தால் டெங்கு சரியாகிவிடும் என்று கூறும் அளவுக்கு மருந்துகள் இல்லை. சில நாடுகளில் டெங்குவுக்கு தடுப்பூசி மருந்து போடுகின்றனர். ஆனால் அந்த ஊசிகள் முழுமையான பாதுகாப்பை வழங்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. டெங்கு தடுப்பூசி மருந்து இந்தியாவிலும் இல்லை. டெங்குவுக்கு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு பல ஆயிரம் கோடி ரூபாயில் உலகெங்கும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் முன்னேற்றம் எதுவும் இல்லை.

நிலவேம்புக் குடிநீர் பலனளிக்குமா?
டெங்குவைக் குணப்படுத்தத் தேவையான மருந்துப் பொருள் நிலவேம்புக் குடிநீரில் உள்ளதா என்று அலோபதி மருத்துவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் அதில் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

அதேநேரம் சித்த மருத்துவம், இந்திய முறை மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்து, டெங்குவுக்கு நிலவேம்புக் குடிநீர் சரியான மருந்துதான் என்று கூறியுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அரசு தற்போது நிலவேம்புக் குடிநீரை வழங்கி வருகிறது என்றனர்.

மூட நம்பிக்கைகள் தேவையில்லை
டெங்கு காய்ச்சல் ஏதோ இன்று புதிதாக வந்த காய்ச்சல் அல்ல. எனவே, மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. பீதியடையத் தேவையில்லை. மாறாக டெங்கு பரவும் விதத்தை அறிந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றாலே போதும் என்கிறார் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர்
எஸ்.அசோக்குமார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
வேறு வழிகளில் பரவுமா?
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் மூலம் மட்டுமின்றி வேறு சில வழிகளிலும் பரவும். ஆனால் அந்த விகிதம் மிகவும் குறைவுதான் என்கிறார் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் எஸ்.அசோக்குமார்.

பெரும்பாலானவர்களுக்கு ஏடிஸ் மூலமே டெங்கு பரவுகிறது. ஆனால், வெகு சிலருக்கு டெங்கு பாதித்தவர்களின் ரத்தத்தை தானம் பெறுவதன் மூலம் பரவுகிறது. அதேபோல் உறுப்பு தானம் மூலம் டெங்கு பரவவும், கர்ப்பிணித் தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தைக்கும் டெங்கு பரவக் கூடும். அதே போலவே முதலில் டெங்கு வந்து குணமடைந்த ஒருவருக்கு 6 மாதங்களோ, ஓராண்டோ கழித்து மீண்டும் டெங்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படி வரக் கூடிய டெங்கு வேறு ஒரு வீரியமான வைரஸ் மூலம் வரும். அப்படியான காய்ச்சல் வந்தால் அது மிகவும் ஆபத்தில்போய் முடியும். முதலில் தங்களுக்கு டெங்கு வந்தது என்பதைக் கூட அந்த நோயாளி அறிந்திராமலும் இருக்க வாய்ப்பு உள்ளது.
மூட நம்பிக்கைகள்
டெங்கு பாதித்தவர்களுக்கு பலரும் வழங்கக் கூடிய ஆலோசனை, நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு பருகினால் அது சரியாகிவிடும் என்பதாகவே உள்ளது. ஆனால் இது மூட நம்பிக்கை. மேற்கண்ட குடிநீரால் எதிர்ப்புச் சக்தி பெருகலாமே தவிர தீவிர டெங்குவை குணப்படுத்திவிட முடியாது. ரத்தத் தட்டணுக்கள் செலுத்துவது, நீர்ச் சத்துகள் குறையாமல் தடுப்பது போன்றவற்றால் மட்டுமே 10-க்கு 9 நோயாளிகள் குணமடைகின்றனர். எனவே, தீவிர காய்ச்சல், குறைவான சிறுநீர் வெளியேற்றம் போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்கிறார் அவர்.
சித்த மருத்துவ சிகிச்சை என்ன?
டெங்கு காய்ச்சல் உள்பட அனைத்து விதமான நச்சு வைரஸ் காய்ச்சல்களைக் குணப்படுத்தும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்கிறார் சித்த மருத்துவ நிபுணர் பி.ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
குழந்தைககளுக்கு அல்லது பெரியவர்களுக்கோ தொடர்ந்து 3 நாள்களுக்கு மேல் 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் டெங்கு காய்ச்சல் குறித்துச் சந்தேகப்பட வேண்டும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தப் பரிசோதனையில் பிளேட்லட்டுகளின் (ரத்த தட்டணுக்கள்) எண்ணிக்கை இயல்பாக 1.4 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சலால் குழந்தையோ அல்லது பெரியவர்களோ பாதிக்கப்படும் நிலையில் பிளேட்லட்டுகளின் (ரத்த தட்டணுக்கள்) எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும். பிளேட்லட்டுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழே குறையும் நிலையில் பல் ஈறுகள், மூக்கு, தோல் பகுதி என உடலின் துவாரங்களிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய நிலை ஏற்படாமல் தவிர்க்க, காய்ச்சலின் அளவு 102 டிகிரிக்கு மேல் தொடர்ந்து 3 நாள்களுக்கு மேல் இருக்குமானால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

காலத்தை வென்ற நிலவேம்பு குடிநீர்
டெங்கு காய்ச்சல் உள்பட அனைத்து வகையான வைரஸ் காய்ச்சல்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நிலவேம்பு குடிநீருக்கு (நிலவேம்பு என்பது மூலிகையின் பெயர்; அதைக் கொண்டு தயாரிக்கப்படும் நிலவேம்பு குடிநீர் என்பது திரவம் அல்ல; சித்த மருத்துவத் தூள் ஆகும்.) உண்டு. நிலவேம்பைப் போன்று பப்பாளி இலைச் சாறு, ஆடாதொடை மணப்பாகு (திரவம்) ஆகியவற்றுக்கும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்தும்
ஆற்றல் உண்டு.

ஆடாதொடையின் சிறப்பம்சம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு நிலவேம்புக் குடிநீருடன் (தூள்) ஆடாதொடை மணப்பாகு (திரவம்) மற்றும் ஆடாதொடை சூரணம் (தூள்) ஆகியவற்றை சித்த மருத்துவர் பரிந்துரையுடன் அளிக்கும்போது பிளேட்லட்டுகளின் (ரத்த தட்டணுக்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக பிளேட்லட்டுகளின் (ரத்த தட்டணுக்கள்) எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் ஆடாதொடைக்கு உள்ளது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் கிடையாது
மேலே குறிப்பிடப்பட்ட சித்த மருத்துவ மூலிகைகளான நிலவேம்புக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு (திரவம்), ஆடாதொடை சூரணம் (தூள்) ஆகியவற்றால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவ முறையில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றவர்களும், சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களும் மேலும் உடல் நலன் மேம்படுவதற்கு சித்த மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதொடை மணப்பாகு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து விடுதலை பெற...
சாதாரணமாகத் தொடங்கி ரத்தக் கசிவு வரை சென்று உயிரைப் பறிக்கும் ஆற்றல் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளது. எனவே, ரத்தப் பரிசோதனையில் பிளேட்லட்டுகளின் (ரத்த தட்டணுக்கள்) எண்ணிக்கை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சித்த மருத்துவ முறையில் சிவனாரமுதம் (தூள்), பவளபற்பம் (கோரை-தூள்), தாளிசாதி சூரணம் (தூள்) ஆகிய மூன்றையும் கலந்து காலை மற்றும் இரவில் சாப்பிட டெங்கு காய்ச்சல் குறைந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால், இந்த மருத்துவ சிகிச்சை முறையை சித்த மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டும்தான் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சித்த மருந்துக் கடைகளுக்குச் சென்று சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவது கூடாது என்றார் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

அனைத்து வகையான காய்ச்சலுக்கும்...
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் ஆகிய 9 மூலிகைகளை சரியான விகிதாசாரத்தில் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து கசாயமாக காய்ச்சி வழங்கி வருகிறோம்.
ஒரு வயது குழந்தைக்கு 5 மி.லி.,
2 முதல் 6 வயது குழந்தைக்கு 10 மி.லி.,
7 முதல் 12 வயது குழந்தைக்கு 20 மி.லி.,
13 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 30 மி.லி.,
21 வயதுக்கு மேற்பட்டோருக்கு 60 மி.லி. முதல்
100 மி.லி வரை அளவு வைத்து காலை, மாலை
நேரங்களில் நிலவேம்புக் குடிநீரை பருகலாம். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் ஏற்றது.
எஸ்.கே. கோபிநாத்
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர் (பயிற்சி)

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு நிலவேம்புக் குடிநீர் மட்டுமல்லாது, பிரம்மானந்த பைரவம், சாந்த சந்திரோதய மாத்திரை, அமுக்காரா சூரண மாத்திரை, வசந்த குசுமாகர மாத்திரை, மகா சுதர்சன மாத்திரை, திரிகடுக சூரணம், லிங்கசெந்தூரம் ஆகிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்பு உள்ளிட்ட அனைத்து மருந்துகளுமே 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்தவை. ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் பேர் நிலவேம்பு பயன்படுத்தி வருவதாக கணக்கிட்டால் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கக் கூடும். இவர்களில் யாருக்கேனும் பக்க விளைவுகளோ, பாதிப்புகளோ இருந்ததாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை.
கோ. சுபாஷ் சந்திரன்
நிலவேம்பு குறித்து பிஹெச்டி பெற்ற பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்

குழந்தைகளைக் கவனியுங்கள்!
டெங்கு காய்ச்சலால் பெரியவர்களைப் போன்று சிறுவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதமும் குழந்தைகளில் அதிகரித்துக் காணப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் அதிக நீர்ச்சத்து இழப்பினால் தான் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள், சிறுவர்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்க வேண்டிய முறைகள் குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் ரவிச்சந்திரன் கூறியது:

விட்டு விட்டு காய்ச்சல் வருவது, திடீரென்று காய்ச்சல் வருவது, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல்வலி, சோர்வு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது வித்தியாசம் ஆகிய அறிகுறிகள் குழந்தைகளிடம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. தேவையற்ற பயமோ, அதே நேரத்தில் அலட்சியமாகவும் பெற்றோர் இருக்கக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீடுகளிலேயே முதல் கட்டமாக குழந்தைகளைக் கவனித்தாலே போதுமானது.
நீர்ச்சத்து ஆகாரம்: காய்ச்சல் நேரத்தில் குழந்தைகள் தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. எனவே, நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை பெற்றோர் கொடுக்க வேண்டும். அரிசிக் கஞ்சி, இளநீர், பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கொடுக்கலாம். கடைகளில் விற்கும் பழச்சாறுகளையோ, பாட்டில்களில் வரும் பழச்சாறுகளையோ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அதில் இனிப்பு அதிகமாகக் காணப்படும். இது குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதிக சூடான, காரமான, பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குணமடைந்தாலும் கவனம் தேவை: குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாகினாலும் அடுத்த 2, 3 நாள்களுக்கு மிகவும் கவனம் தேவை. சிலருக்கு காய்ச்சல் குணமான மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் பிரச்னைகள் ஏற்படும். எனவே, காய்ச்சல் குணமடைந்தாலும் மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்.

நிலவேம்பு குடிநீர்: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 2010-ஆம் ஆண்டில் இருந்து நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதனைத் தயாரித்து வழங்குகிறோம். எனவே, இதுவரை அதுதொடர்பான எந்தப் பிரச்னைகளோ பக்க விளைவுகளோ வந்ததில்லை என்றார் அவர்.
கொசுக் கொல்லி மருந்துகளை எப்போது அடிக்க வேண்டும்?
டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கு கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், எல்லா நேரங்களிலும் கொசுக் கொல்லி மருந்துகளை அடிக்கக் கூடாது. அப்படி அடிப்பதனால் பயன் எதுவும் விளையப் போவது இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஏடிஸ் எஜிப்டை மற்றும் அல்போபிக்டஸ். இதில் எஜிப்டை வகைக் கொசுக்கள் வீடுகளில், கட்டடங்களுக்கு உள்ளே வசிக்கக் கூடியவை, அல்போபிக்டஸ் எனும் வகைதான் வெளிப்புறங்களில் வசிக்கக் கூடியவை.

தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தி வருபவை ஏடிஸ் எஜிப்டை வகைக் கொசுக்கள்தான். எனவே, அவற்றுக்கு கொசு மருந்துகளையும், புகை மருந்துகளையும் எல்லா நேரத்திலும் அடிக்கக் கூடாது.
பொது சுகாதார பூச்சியியல் வல்லுநர் சங்கத்தின் தலைவர் ஆர்.அசோகன் கூறியது: வீடுகளில் உள்ளே தங்கியிருக்கும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு தெருவில் மருந்தடித்து விட்டுப் போவதால் பயன் எதுவும் இல்லை.
மேலும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு சூரிய உதயத்துக்கு மூன்று மணி நேரத்துக்கு பிறகும், சூரிய அஸ்தமனத்துக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பும் மருந்து அடித்தால்தான் அது விளைவுகளை ஏற்படுத்தும். பகல் நேரங்களில் அடித்தால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படாது என்றார்.

இயற்கை கொசுவிரட்டி: கொசுக்களைத் தவிர்க்க நொச்சி இலை சிறந்தது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லெமன் கிராஸ் என்று அழைக்கப்படும் இலையை சிறிய சிறிய கட்டுகளாகக் கட்டி வீட்டில் ஆங்காங்கே தொங்க விடலாம். மேலும் வேப்பம் இலை, தழைகளைக் கொண்டு புகை போடலாம் என்றும் தெரிவித்தனர்.