பள்ளிகளில் பாதுகாப்பதில் சிக்கல்: விலையில்லா மடிக்கணினிகள் விரைந்து வழங்கப்படுமா?

மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினிகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு பல வாரங்கள் கடந்த நிலையில் அவற்றைப் பாதுகாப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால் மடிக்கணினிகளை விரைந்து வழங்க வேண்டுமென தலைமையாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை அரசு வழங்கி வருகிறது. பல பகுதிகளில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை.
மாணவர்களுக்கு வழங்குவதற்காக தேவையான விலையில்லா மடிக்கணினிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு 3 வாரங்கள் கடந்த பின்பும் அவற்றை மாணவர்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பள்ளிகளிலுள்ள அறைகளில் அவை பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மடிக்கணிகளை பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முறையாக பாதுகாப்பதில் சிக்கல் உள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல பள்ளிகளில் இரவுக் காவலர் இல்லாத நிலையில் மடிக்கணினிகளை பாதுகாப்பாக வைப்பது கேள்விக்குறியாகி வருகிறது. இன்னும் சில அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளுக்கே போதிய கட்டடங்கள் இல்லாத நிலையில், அதில் ஒரு அறையை மடிக்கணினியை வைப்பதற்காக பயன்படுத்த வேண்டியுள்ளதால் மாணவர்கள் மரத்தடியில் படிக்க வேண்டிய நிலையும் உருவாகி வருகிறது.
கடந்த காலங்களில் இதுபோல் பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள் திருடு போன சம்பவங்களில் அவற்றுக்கான முழுத்தொகையையும் தலைமையாசிரியர்களே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மடிக்கணினிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல் நிலையத்தில், தலைமையாசிரியர்கள் முறையிட்டும் எல்லா பள்ளிகளுக்கும் அது போல் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டு விட்டதாக தலைமையாசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
மடிக்கணினிகள் பள்ளிகளுக்கு வந்த பின்பும் அவை வழங்கப்படாததால் மாணவர்களும் வேதனையடைந்து வருகின்றனர்.

எனவே, மடிக்கணினிகளை விரைவாக வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று வழி: ஒரு கல்வி மாவட்டத்துக்குள்பட்ட எல்லா பள்ளிகளுக்கும் வழங்க வேண்டிய விலையில்லா மடிக்கணினிகளை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்து அங்கு போதிய காவல்துறையினரை நியமித்தால் மடிக்கணினிகள் பாதுகாப்பாக இருக்கும். கொடுக்க வேண்டிய தினத்தில் குறிப்பிட்ட பள்ளிக்கு அந்த மடிக்கணினிகளை அனுப்பி வைத்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் தலைமையாசிரியர்கள்.