விரைவில் 744 டாக்டர்கள் நேரடி நியமனம்: அமைச்சர்

திருச்சியில், காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். 
சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி, மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், சிறப்பு பிரிவில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின், அவர் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, டாக்டரின் நேரடி கண்காணிப்பில், ஒரு வாரம் வரை சிகிச்சை பெற வேண்டும். ரத்த பரிசோதனை செய்து, டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட, 179 பேர் சிறப்பு பிரிவில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதில், 12 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தடுப்பதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை கண்டறிய, திருச்சி அரசு மருத்துவமனையில், மூன்று உட்பட, தமிழகத்தில், 23.50 கோடி ரூபாய் செலவில், 833 செல் கவுண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, டெங்கு பாதிப்பை கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.
மருத்துவத் துறை பணியை வேகப்படுத்தும் விதமாக, விரைவில், 744 டாக்டர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.