தலைநகரில் நவ. 7, 8-இல் வேலைவாய்ப்பு முகாம்

தில்லி அரசின் சார்பில் நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் தியாகராஜா விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

"தில்லி அரசு சார்பில் இரு நாள் வேலைவாய்ப்பு முகாம் தியாகராஜா விளையாட்டு அரங்கில் நவம்பர் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடங்கி வைக்கிறார்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அரசின் www.employment.delhigovt.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை அந்தந்த தனியார் நிறுவனங்கள் நேர்காணல் செய்யும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இதுவரை 350 தனியார் நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளன. 69 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 5,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்' என்றார் அவர்.
தில்லியில் 2015, டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

தில்லி வேலைவாய்ப்புத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 11 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த முகாமில் 112 பேர் வேலைவாய்ப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.