ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு
நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


எனவே, இனி வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் நகல்களுடன், அதன் அசலையும் எடுத்துச் செல்ல வேண்டும். போலியான அடையாள ஆவணத்தின் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நிதி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களைப் பெறும்போது, அசல் ஆவணத்தையும் பார்த்து உறுதி செய்வதுடன், அந்த ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்களை இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை முகவர்கள், சீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றத்துக்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரன்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
மின்னணு முறையில் வெளிநாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது; ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையாத சொத்துகளை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றுக்கும் இந்த விதிகள் உண்டு.
மேலும், இருப்பிடத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், போஸ்ட் பெய்டு செல்லிடப்பேசி கட்டணம், காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது