EMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்-தட்டச்சர் பதவியில் 129 காலியிடங்களை நேரடியாக நிரப்ப ஆன்லைனில் (www.jat.tnausms.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் ஹையர் கிரேடு அல்லது ஏதேனும் ஒன்றில் ஹையர் கிரேடு, மற்றொன்றில் லோயர் கிரேடு முடித்திருக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்திய ‘ஆபீஸ் ஆட்டோமேசன்’ என்ற கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (தட்டச்சு தேர்வு), நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வில் பொது அறிவு பகுதியில் 60 கேள்விகள், நுண்ணறிவுத் திறன், கணிதத்திறன் பகுதியில் 20 வினாக்கள், பொது தமிழ், ஆங்கிலம் பகுதியில் 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும்.
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், தட்டச்சு தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 20 மதிப்பெண். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 30 மதிப்பெண். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.jat.tnausms.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 129 காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, அதன் பிரிண்ட் அவுட் பிரதியை தேர்வுக் கட்டணத்துக்குரிய டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.