தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுதில்லி: தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான எந்தப் போராட்டங்களையும், யாரும் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் 'நீட்' தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க கூடாது என்று கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த மனுவானது இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விபரம் பின்வருமாறு:
தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், தனி நபர்கள் என எவரும் எந்தப் போராட்டங்களையும், நடத்தக் கூடாது. சாலை மறியல், கடை அடைப்பு உட்பட பொதுமக்களை பாதிக்க கூடிய எந்தப் போராட்டங்களையும் மேற்கொள்ள கூடாது.
நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் போராட்டங்களை நடத்துவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும்,.

அத்துடன் நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும். எனவே தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதி தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பின்பு வழக்கானது வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.