அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர்

ஆத்துார்: வேலைநிறுத்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால், ஆய்வுக்கு வந்த சேலம் கலெக்டர், ரோகிணி அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு, பாடம் நடத்தினார்.

சேலம் மாவட்டம், கருத்தராஜா பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு, நேற்று கலெக்டர், ரோகிணி சென்றார். ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் தனியாக படித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்த கலெக்டர், தன்னுடன் வந்த அதிகாரிகளை வகுப்பறைக்கு வெளியே அனுப்பினார்.
மூன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, உள்ள மாணவ மாணவியருக்கு பாடம் நடத்தினார். ஆங்கில பாடத்தில் உள்ள பாடல்களை, மாணவர்கள் படித்து காட்டினர். பின், மாணவர்கள் பெயர், பெற்றோர் பெயர், எதிர்காலத்தில் என்ன படிக்க போகின்றனர் என்று கேள்வி கேட்டதுடன், கரும்பலகையில் எழுதியும், படித்தும் காண்பித்தார்.
ஆங்கில வார்த்தைகளை கூறி, மாணவர்களிடம் அதன் பொருள் கேட்டார். மாணவர்களுக்கு, அரை மணி நேரம் பாடம் நடத்திவிட்டு புறப்பட்டார்.
இது குறித்து, கலெக்டர் ரோகிணி கூறுகையில்,''வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிக்கு ஆசிரியர்கள் பணிக்கு வராததால், 40 மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடம் நடத்தியது மனநிறைவாக உள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.