நீதிமன்ற தீர்வின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு - ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், தாஸ், வெங்கடேசன், மோசஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ஐகோர்ட்டின் கோரிக்கையை ஏற்று ஜாக்டோ-ஜியோ தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை ஒத்தி வைத்து இருக்கிறது. ஐகோர்ட்டு, தலைமை செயலாளரை 21-ந்தேதி நேரில் கோரிக்கைகளின் மீதான விவரங்களுடன் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளது.

4-ம் அம்ச கோரிக்கை

* ஜாக்டோ-ஜியோவின் தலைமை தனது நியாயமான 4 அம்ச கோரிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்யாமல், அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.

* வருகிற 21-ந்தேதி ஐகோர்ட்டின் மூலம் கிடைக்கும் தீர்வின் அடிப்படையில் 22-ந்தேதி அன்று ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் மதுரையில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கும்.

* ஐகோர்ட்டு மதுரை கிளையில் 15-ந்தேதி நடைபெற்ற வழக்கில் நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள், அதன் மீதான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக வாதாடிய வக்கீல் எடுத்துரைத்த வாதங்கள் ஆகியவை குறித்து 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஒவ்வொரு மாவட்டத்திலும் விளக்கக்கூட்டம் நடத்த முடிவு என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரையில் அடுத்தகட்ட முடிவு

அதைத்தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

21-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் எங்கள் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்க இருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா 110-விதியின் கீழ் எங்களுக்கு அறிவித்த அறிவிப்புகளையும் சமர்ப்பிக்கிறோம். வருகிற 21-ந்தேதி நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கும் தீர்வின் அடிப்படையில், அதற்கு அடுத்த நாள் (22-ந்தேதி) மதுரையில் கூடும் உயர்மட்டக்குழுவில் அடுத்தகட்ட முடிவு குறித்து தெரிவிப்போம். நாங்கள் சம்பளத்தை இழந்துதான் போராட்டத்தை நடத்துகிறோம்.

அதேபோல் போராட்டகாலத்தில் எங்கள் மீது துறைரீதியாக விளக்கம் கேட்டு கடிதம் வந்து இருக்கிறது. மேலும், சில துறைரீதியான நடவடிக்கைகளும் ஊழியர்கள்-ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்தும் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.