அரசுப் பள்ளியில் உங்கள் குழந்தைகள் படித்தால் போராடுவீர்களா?... ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

போராட்டத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கு படித்தால் போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. 
ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக அரசுக்கு12 கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்கவும நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. பணிக்கு செல்லாத 33,487 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
வேலை நிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும் என்றும், 43,508 ஆசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதகவும் கூறியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் வாதத்தை கேட்ட நீதிபதி கிருபாகரன், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தால் போராட்டத்தில் ஈடுபடுவீர்களா? என கேள்வி எழுப்பினார். 
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் எதிரானது அல்ல. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்தை தான் கவனத்தில் கொள்கிறேன். அரசு ஊழியர்கள் பற்றி நான் கேட்கவில்லை. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக இருந்த போராட்டம், சமூக, மதம் மற்றும் மொழிவாரியாக மாறியுள்ளது என்று கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்