ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உணவு சமைத்து உண்ணும் போராட்டம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு



ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவு சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு ஆசிரியர் இறந்தார். ஒரு ஆசிரியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பும் அரசும் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த பிறகு ஜாக்டோ-ஜியோவின் போராட்டங்கள் படிப்படியாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த மாதம் 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தொடங்கியதில் இருந்து போராட்டம் தீவிரம் அடைந்து அடுத்தகட்டத்துக்கு தாவியுள்ளது. இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 11ம் தேதி ஆர்ப்பாட்டம், 12ம் தேதி மறியல் ஆகியவை எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்தாலும், அரசு தரப்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதனால் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரவு முழுவும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என்ற பேதம் ஏதும் இல்லாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே சமைத்து, அங்ேகயே தூங்கி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மதுரை உயர்நீதி மன்ற கிளை போட்ட உத்தரவின் பேரில், ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று மதுரைக்கு புறப்பட்டு செல்கின்றனர். நாளை நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். இந்நிலையில், திட்டமிட்டபடி இன்றும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர். கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடந்தது. இன்று காலை எழிலக வளாகத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த போலீசார் எழிலக வளாகத்தில் மைக் செட் கட்டி பேசக் கூடாது என்று தடை விதித்தனர். இதனால் காலை முதலே எழிலக வளாகம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்துக்கு வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் காலையில் கைது செய்யும் படலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.