ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்: முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசின் சார்பில் ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைமை செயலகத்தில் ஜாக்டோ அமைப்பினர் அமைச்சர்களுடனான பேச்சு வார்த்தை இன்று நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில், அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அரசிடமிருந்த சாதகமாகன பதில் வரவில்லையெனில் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.