உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) வெளியிட வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவடைவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு முறையாக பின் பற்றப்படவில்லை எனப் புகார் கூறி திமுக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என திமுக சார்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதால் தேர்தல் தள்ளிப் போனது.
சமீபத்தில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், தேர்தலுக்கான அட்டவணையை செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமையுடன் (செப்.18) நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைவதால் திங்கள்கிழமை, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட மேலும் சில வாரங்கள் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்ய மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இடஒதுக்கீடு முறையில் தொகுதிகள் இன்னமும் வரையறை செய்யப்படவில்லை என்பதை கட்டிக் காட்டி மேலும் கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.