அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை: முதல்வரிடம் அறிக்கை தாக்கல் - செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த
அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று அறிக்கையை வழங்கியது.

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களையும் விதமாக, அவர்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அமைத்தது.

ஜாக்டோ-ஜியோ போராட்டம்
இந்தக் குழு முதலில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றது. அதன்பின், தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை அளிப்பது தாமதமாகி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தொடங்கியது

அமைச்சர்கள் குழுவினர், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளிடம் பேசினர். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியக்குழு பரிந்துரைகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான குழு பரிந்துரையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை அக்டோபர் 15-க்கு தள்ளி வைத்தனர். மற்றொரு பிரிவினர் கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதன்பின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது, அக்டோபர் 13-ம் தேதிக்குள் ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஊதியக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும் நிதித் துறை செயலருமான கே.சண்முகம், 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். அப்போது, துணை முதல்வர் .பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.


வரவேற்பு
நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு ஜாக்டோ - ஜியோ கிராப் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், உத்தரவாதம் அளித்தவாறு செப்.30-ம் தேதிக்குள் 7-வது ஊதியக்குழு அறிக்கையை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


முதல் வெற்றி

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘நீதிமன்ற தலையீட்டால் கண்டிப்பான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டபின், தற்போது முதன்முறையாக சொன்ன காலவரையறைக்குள் அலுவலர் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. இது காலதாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும், அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்னவென்று தெரியாத போதும், நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குறித்த நாளுக்குள் வெளியிடப்பட்டுள்ளது உண்மையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்என கூறப்பட்டுள்ளது.